முதலில் சுத்தம்
தொழில் ஆற்றும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் , உடை சுத்தமாக இருக்க வேண்டும், சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவிகிதம் இலாபம் கிடைத்து விட்டதாக மேல்நாட்டு வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதையே இஸ்லாம் சுத்தம் ஈமானின் ஒரு பகுதி என்று மக்களுக்கு பரிந்துரை செய்கின்றது.
வரவேற்பு
ஒரு வாடிக்கையாளர் கடையில் முதன்முறையாக நுழையும் போது அவரை விருந்தாளிகளை வரவேற்பது போன்று அன்புடன் வரவேற்க வேண்டும். அவரை முதலாவதாக சந்தித்தது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறி இருக்கையில் அமரச் செய்ய வேண்டும். இப்படி கூறி சிறிது நேரம் சென்ற பின் என்ன தேவைக்காக வந்திருக்கின்றீர்கள் என்று வினவ வேண்டும். எனக்கு இன்ன பொருள் தேவைப்படுகிறது என்று கூறியதும், நான் எடுத்து தருகிறேன் என்று கூறாமல் நாம் சேர்ந்தே தேர்ந்தெடுப்போம் என்று கூறினால் வாடிக்கையாளர் மிக்க சந்தோஷமடைவார்.
தொடர்புடைய சாதனங்களை பரிந்துரை செய்தல்
வாடிக்கையாளர் தனக்கு தேவைப்பட்ட பொருட்களை தேர்ந்தெடுத்த பின் விற்பனையாளர் அத்துடன் முடித்துக் கொள்ளாமல் தொடர்புடைய சாதனங்களைப் பரிந்துரை செய்ய வேண்டும். உதாரணமாக, சட்டை துணியை தேர்ந்தெடுத்த பின் அதற்கு இணையாக வேஷ்டி, துண்டு மற்றும் பனியன் போன்ற உள்ளாடை முதலியவற்றை வாங்குமாறு பரிந்துரை செய்ய வேண்டும். இந்த முயற்சி வியாபாரத்தில் நல்ல பலன்களை கொடுக்கும். தேர்ந்தெடுத்த பின் வாடிக்கையாளர் புறப்பட தாயாராகும் போது, எங்கள் நிறுவனத்தில் தாங்கள் தேவைக்கேற்ற சாதனங்களைத் தேர்ந்தெடுத்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எங்கள் நிறுவனத்தை அறிமுகம் செய்து வையுங்கள் என்றும், மறவாமல் முகவரியையும் கேட்டு குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் வாடிக்கையாளருடன் நல்ல நட்புறவு ஏற்படின் அவர்கள் தங்கள் வீட்டின் விஷேசத்திற்கு தங்களை அழைத்தால் வியாபார நேரத்திலும் அங்கு சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவர்கள் மூலம் உங்கள் நிறுவனத்தின் அறிமுகம் மேலும் பல வாடிக்கையாளர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த ஏதுவாக இருக்கும்.
மேலும், விழாக்காலங்களில் தள்ளுபடி அறிவித்தாலும் அதை கடிதம் மூலம் தெரியப்படுத்தினால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள். அவர்களுடைய பண்டிகை மற்றும் விழாக்களிலும் மறவாமல் வாழ்த்து அனுப்பும் போதும் உங்கள் நிறுவனத்தைப் பற்றிய நல்ல எண்ணம் அவர்கள் மத்தியில் உயரும்.
உண்மை கூறி, வாடிக்கையாளர் எளிதாக எடுக்கும் வண்ணம் பொருட்களை வைத்தல்
சில கெட்டுப் போகின்ற பொருள்களின் உற்பத்தி மற்றும் காலாவதி ஆகின்ற தேதிகள் பொருள்களின் மேலோ அல்லது மேல் உறையிலோ அச்சிடப்பட்டிருக்கும். அவைகள் தெளிவாக தெரியும் விதமாகவும் வைத்து பொருட்களின் தரத்தை மிகைப்படுத்தி கூறாமல் உண்மை நிலையினை கூறி, வாடிக்கையாளர்கள் எளிதாக எடுக்கும் வண்ணம் காட்சிப் பொருளாக வைக்க வேண்டும்.
ஒரு வியாபாரி தன்னுடைய விற்பனையை அதிகரிக்க விரும்பினால் கூடியவரை பொருட்களை வாடிக்கையாளர்கள் எடுத்துப் பார்ப்பதை அனுமதிக்க வேண்டும். முதலில் சாதாரண பொருட்களை காட்டி விட்டு படிப்படியாக விலை உயர்ந்த பொருட்களை காட்ட வேண்டும். விற்பனையாளர் பொருளின் தகுதியை விளக்கமாகவும், உற்சாகமாகவும் எடுத்துரைக்க வேண்டும். அவர் அதனை எடுத்துரைக்கும் முறையிலேயே வாடிக்கையாளர் அதன் தரத்தை உணர்ந்து, அதிக விலை கொடுத்தும் வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ண வேண்டும். எனவே, விற்பனையாளர்கள் பொருள்களின் தரத்தையும், மதிப்பையும் பற்றி தெள்ளத் தெளிவாக அறிந்தவராக இருக்க வேண்டும்.
மேலும், முடிந்தால் விற்பனையாளர் பொருள்களின் தன்மையை உபயோகத்தின் மூலம் எடுத்துக் காட்டலாம். இந்த முயற்சி அந்த பொருள்களின் மீது இருந்த சந்தேகத்தை வாங்குபவருக்கு தெளிவுபடுத்திவிடும். உதாரணமாக ஒரு புத்தகத்தை விற்பனை செய்கின்றார் என்றால் அவர் இப்படிக் கூற வேண்டும்!
‘தயவு செய்து அதன் பக்கங்களை சிறிது புரட்டிப் பாருங்கள்!’ உங்கள் அறிவிற்க்கு நல்ல விருந்தாக அமையும் என்று.
விளம்பரம்
எந்த ஒரு வியாபாரத்திலும் விளம்பரம் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது. வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பொருள்களை அவர்களுக்கு நினைவு படுத்துவதற்காக ஒரு பலகை தொங்க விடப்பட்டிருக்கின்றது அதில் ‘இந்தச் பொருள்கள் உங்களுக்குத் தேவையல்லவா? இவற்றை நீங்கள் வாங்கிவிட்டீர்களா?’ என்று சிந்தனையை தூண்டும் விதத்திலும் பொருட்களை வாங்குவதற்கு வாசகம் எழுதப்பட்டிருக்கின்றது விளம்பரம் செய்யாத ஒரு வியாபாரம் வாயில்லா ஊமையேயன்றி வேறில்லை. வியாபாரத்தின் வாய் விளம்பரமேயாகும்.
விளம்பரத்தின் நோக்கமே ஒரு தொழிலுக்கு அங்கு உற்சாகத்துடன் செய்யப்படும் பொருட்களுக்கு மக்களிடையே நன்மதிப்பை ஏற்படுத்தி, குறைந்த விலைக்கு அதிகமான பொருள்களை விற்பனை செய்வதேயாகும், ஒரு விளம்பரம் அவ்விதம் செய்யத் தவறினால் அது போலி விளம்பரமேயன்றி வேறில்லை. ஒரு வியாபாரி சக்தியுள்ள விளம்பரம் ஒன்றைச் செய்ய நினைத்தால் அவர் தனக்கு விருப்பமான விஷயங்களை கூறாது மற்றவர்களுக்கு விருப்பமானதையே கூற வேண்டும். விளம்பரம் என்பது சுருக்கமாகவும் சுவாரஸ்யத்துடன் இருக்குமாறு அமைத்தல் வேண்டும். பொருள்கள் பற்றிய படங்களுடன் கண்கவர் விதத்தில் இருந்தாலும் இன்னும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும். விளம்பரம் என்பது வீணான பெருமைச் சொற்களால் நிரம்பியிராமல் தெளிவானதாகவும், எளிதானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.
கொள்முதல்
வியாபாரத்தில் கூடியவரை ரொக்கத்தில் கொள்முதல் செய்ய வேண்டும் ரொக்கத்திற்கு நேரடியாக பணம் கொடுத்து வாங்கும் போது மிக மலிவாக பேரம் பேசி வாங்க முடியும். இப்படிச் செய்தால் மற்றவர்களை விட விலை சிறிது குறைத்து உங்களின் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியும். எந்தப் பொருளின் தேவை மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கின்றதோ அதை கொள்முதல் செய்கின்ற போது 5 பெட்டி வாங்கினால் 1 பெட்டி இலவசம் என்று வரும் பொழுது அதிகப்படியாக கொள்முதல் செய்து இலவச பெட்டியின் அடக்க விலையை மற்ற பெட்டிகளில் சரிசமமாகப் பிரித்து இன்னும் வாடிக்கையாளர்களுக்கு மிகமிக குறைந்த விலைக்கு கொடுக்கலாம்.
மேலும் ஒரு வியாபாரி பொருள்களை கொள்முதல் செய்யுமுன் பல்வேறு விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். தரத்தைப் பற்றியும் விலையைப் பற்றியும் அறிவதுதான் மிக முக்கியம். யாரிடம் நல்ல பொருள்கள் கிடைக்கும் என்பதை நேரிலோ, கடிதம் மூலமோ அறிந்துக் கொள்ள வேண்டும். அதன் பின் யாரிடம் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்முதல் செய்ய வேண்டும்.
பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துதல்
பொதுமக்களுக்கு தேவையான எல்லா பொருட்களையும் போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அந்த கடைக்கு சென்றால் அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்று மக்கள் நம்பி வருமாறு செய்து கொள்ள வேண்டும். ஒருவர் கேட்கும் பொருள் இல்லை என்றால் அதனை வேறு கடைக்கு ஆள் அனுப்பி வாங்கி கொடுக்க வேண்டும். அவ்விதம் செய்தால் வருங்காலத்தில் மதிப்புள்ள வாடிக்கையாளர்களை சேர்த்து தரும். ஒரு நூதனமான பொருள் சந்தைக்கு வந்திருப்பின் எல்லோருக்கும் முன்பாக சிறிது கொள்முதல் செய்து அவற்றை தம்முடைய வாடிக்கையாளர்களுக்கு காண்பித்து அதை வாங்குமாறு செய்ய வேண்டும்.
மேலும், விற்கப்பட்ட பொருள்கள் பழுது ஏற்பட்டு வாடிக்கையாளர் திரும்ப வந்து அதை கூறும் போது, இன் முகத்துடன் பெற்றுக் கொண்டு மாற்றுப் பொருள் கொடுப்பின் அவர் மகிழ்ச்சியடைந்து பலரிடம் இதைப்பற்றி கூறி நமக்கு நல்ல பெயரையும், புது வாடிக்கையாளர்களையும் பெற்று தரும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும், குறித்த நேரத்தில் கடையை திறந்து இரவு மூடிய பின்பும் யாரேனும் ஒரு சின்ன பொருளை கேட்டு வந்தாலும் முகம் கோணாமல் திறந்து எடுத்துக் கொடுத்தால் தன்னுடைய கடையின் மேல் நம்பிக்கை மென்மேலும் வளரும் என்பதில் சந்தேகமில்லை.
Traker
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment