Traker

Monday, October 11, 2010

நபி வழியில் நம் தொழுகை - 06 (ஓதல்கள்)

தொழுகையின் ஆரம்பத்தில் மட்டும் அவூது ஓதுதல்

ஸனா ஓதி முடித்தபின் "அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்" என்று ஆரம்பித்து "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" எனக் கூறி சூரத்துல் பாத்திஹாவை ஓதவேண்டும்.

"(நபியே) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இறைவனிடம் காவல் தேடுவீராக!" (அல்குர்ஆன் 16:98)

اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

பொருள்: எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

முதல் ரக்அத்தில் மட்டும்தான் "அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்" கூறவேண்டும். மற்ற ரக்அத்களில் இதனை ஓதுவதற்கு ஆதாரம் இல்லை.

"நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்ததும் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" என்று ஓதத் தொடங்கி விடுவார்கள். (முதல் ரக்அத்தில் சிறிது நேரம் மவுனமாக இருந்தது போல் இரண்டாம் ரக்அத்தில்) மவுனமாக இருக்கமாட்டார்கள்" (அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, முஸ்லிம்

ஒவ்வொரு ரக்அத்திலும் சூராக்களை ஆரம்பிக்கும்போது بسم الله الرحمن الرحيم "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என கூற வேண்டும்.

பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்) அடுத்து பிஸ்மியை தொடர்ந்து சூரத்துல் பாத்திஹா ஓதவேண்டும்.

சூரத்துல் ஃபாத்திஹா

"சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்கு தொழுகையில்லை" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உபாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதீ

الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمـنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ


பொருள்:1. சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே சர்வ உலகங்களையும் (படைத்து) பரிபாலித்து இரட்சிப்பவன் 2. அளவற்ற அருவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். 3.தீர்ப்பு நாளின் எஜமானன். 4. உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; இன்னும் உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். 5. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக. 6. நீ எவர்களின் மீது அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி(யில் நடத்துவாயாக!) 7.(உனது) கோபத்திற்குள்ளானவர்களும் வழி தவறியவர்களும் சென்ற வழியல்ல.

இமாமைப் பின்பற்றித் தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதக்கூடிய ரக்அத்துகளில் எதனையும் ஓதாமல் இமாம் ஓதுவதைத் கேட்கவேண்டும். இமாம் சப்தமிட்டு ஓதாத ரக்அத்துகளில் அவரும் ஓதியாக வேண்டும்.

"குர்ஆன் ஓதப்பட்டால் அதைச் செவி தாழ்த்திக் கேளுங்கள். மவுனமாக இருங்கள்" என இறைவன் கூறியுள்ளான். (அல்குர்ஆன் 7:204)

"இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பது பின்பற்றப்படுவதற்கே! அவர் தக்பீர் கூறும்பொழுது நீங்களும் தக்பீர் கூறுங்கள்! அவர் ஓதும்போது நீங்கள் மவுனமாக இருங்கள்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: முஸ்லிம்

சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடிந்ததும் "ஆமீன்" கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் ஃசூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும் (தொழவைப்பவரும்) மஃமூமும் (பின் நின்று தொழுபவரும்) சப்தமிட்டு ஆமீன் கூற வேண்டும்.

"நபி صلى الله عليه وسلم அவர்கள் வலழ்ழாள்ளீன் என்று கூறியதும் முதல் வரிசைக்கு கேட்குமளவிற்கு ஆமீன் கூறுவார்கள்" அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா

"இமாம் கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்" எனக்கூறும்போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

இந்தப் பள்ளிவாசலில் (சுமார்) 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். (அவர்கள்) இமாம் "கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்" எனக் கூறும்போது "ஆமீன்" என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன். அறிவிப்பவர்: அதா நூல்: பைஹகீ

இந்த ஹதீஸை கவனித்தால் ஆமீன் சப்தமிட்டே கூறவேண்டுமென அறியலாம்.

ஸூரத்துல் ஃபாத்திஹாவுக்குப் பின் வேறு வசனங்களை ஓதும் முறை

ஸூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்தபின் குர்ஆனில் வேறு வசனங்களையோ, அத்தியாயங்களையோ ஓதவேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் லுஹரின் முதலிரண்டு ரக்அத்துகளில் ஸூரத்துல் ஃபாத்திஹாவையும் வேறு இரு ஸூராக்களையும் ஓதுவார்கள். ஆறிவிப்பவர்: அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

முதலிரண்டு ரக்அத்துகளைப் பொறுத்தவரை எல்லா நேரங்களிலும் ஸூரத்துல் ஃபாத்திஹாவுடன் வேறு வசனங்களை நபி صلى الله عليه وسلم அவர்கள் ஓதியுள்ளனர். ஆனால் மூன்றாம் நான்காம் ரக்அத்களில் ஸூரத்துல் ஃபாத்திஹாவை ஓதியிருக்கிறார்கள். சில சமயங்களில் ஸூரத்துல் பாத்திஹாவுடன் வேறு வசனங்களையும் ஓதியிருக்கிறார்கள். எனவே முதலிரண்டு ரக்அத்களில் ஸூரத்துல் ஃபாத்திஹாவுடன் வேறு வசனங்களை ஓதவேண்டும். மற்ற இரண்டு ரக்அத்களில் ஃஸூரத்துல் பாத்திஹாவை மட்டும் ஓதலாம். அல்லது வேறு வசனங்களையும் ஓதலாம்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் லுஹரின் முதலிரண்டு ரக்அத்களில் முப்பது ஆயத்துகள் அளவு ஓதுவார்கள். பின்னிரண்டு ரக்அத்களில் பதினைந்து ஆயத்துக்கள் அளவு ஓதுவார்கள். அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி) நூல்கள்: அஹ்மத், முஸ்லிம்

முழு அத்தியாயமாக ஓதுதல்

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் மிகப் பெரும் ஸுராக்கைைள ஒதித் தொழுவித்து மக்களுக்குக் கஷ்டம் கொடுப்பதை நபி صلى الله عليه وسلم அவர்களிடம் முறையிட்டபோது "முஆதே! நீ குழப்பத்தை ஏற்படுத்துகிறாயா? ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா, வஷ்ஷம்ஸிவலுஹாஹா வல்லைலி இதாயக்ஷா ஆகியவற்றை ஓதியிருக்கலாகாதா? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் வினவினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

ஆங்காங்கே சில வசனங்கள் ஓதுதல்

குர் ஆனின் முழு அத்தியாயம் இல்லாமல் அதிலுள்ள சில வசனங்களை மட்டும் ஓதலாம்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ருடைய இரண்டு ரக் அத்களில் முதல் ரக்அத்தில் பகரா அத்தியாயத்தில் உள்ள கூலூ ஆமின்னா பில்லாஹி (2:136) என்ற வசனத்தையும் இரண்டாம் ரக்அத்தில் "ஆமன்னா பில்லாஹி வஷ்ஹத் பிஅன்னா முஸ்லிமூன்"(3:52) என்ற வசனத்தையும் ஓதினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத்

ஒரே அத்தியாயத்தை திரும்பத் திரும்ப ஓதுதல்

நபி صلى الله عليه وسلم அவர்கள் ஸுப்ஹுத் தொழுகையில் இரண்டு ரக்அத்களிலும் இதா ஸுல்ஸிலதில் அர்ளு என்பதையே ஓதினார்கள். நூல்: அபூதாவூத்

ஒரே அத்தியாயத்தை பகுதி பகுதியாக இரண்டு ரக்அத்களில் ஓதுதல்

நபி صلى الله عليه وسلم அவர்கள் அஃசராப் ஸூராவை மஃரிபின் இரண்டு ரக்அத்களிலும் பகுதி பகுதியாக ஓதினார்கள். அறிவிப்பவர்: ஆயிஸா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ

அத்தியாயங்களை வரிசை தவறி ஓதுதல்

நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நான் ஒரு நாள் இரவில் தொழுதேன். முதலில் பகரா ஓதி பின்னர் நிஸா ஓதி பின்னர் ஆல இம்ரான் ஓதினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ

இரண்டாம் ரக்அத்தைவிட முதல் ரக்அத்தில் அதிக அளவு ஓதுதல்

நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்தை முதல் ரக்அத்தை நீட்டுவார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
Share

0 comments:

Related Posts with Thumbnails