Traker

Monday, October 11, 2010

நபி வழியில் நம் தொழுகை - 10 (அத்தஹிய்யாத்)

அத்தஹிய்யாத் இருப்பு முறை

நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமரும் போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்துக் கொண்டார்கள். கடைசி இருப்பின் போது இடது காலை வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைத்து தமது இருப்பிடம் தரையில் படுமாறு அமர்ந்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

நபி صلى الله عليه وسلم அவர்கள் தஷஹ்ஹுதில் அமரும்போது தமது வலது கையைத் தமது வலது தொடைமீதும், இடது கையைத் தமது இடது தொடைமீதும் வைத்து ஆட்காட்டி விரலால் இஷாராச் செய்வார்கள். அவர்களின் பார்வை அவர்களின் இஷாராவைக் கடந்து செல்லாது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ, தாரமி

இருப்பில் ஓதவேண்டியவை



"அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு" என தொழுகையில் அமரும்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறச் சொன்னார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி,முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா

பொருள்: எல்லாவிதமான கண்ணியங்களும் தொழுகைகளும் நல்லறங்களும் இறைவனுக்கே உரியது. நபியே! உம்மீது சாந்தியும் இறைவனின் அருளும் விருத்தியும் உண்டாகட்டுமாக! மேலும், எங்கள் மீதும் ஏனைய நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டுமாக! வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது صلى الله عليه وسلم அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

கடைசி இருப்பில் அமரும் முறை

"எந்த ரக்அத்தில் ஸலாம் கொடுக்க வேண்டுமோ அந்த இருப்பில் (அல்லாஹ்வின் தூதர்) அவர்கள் இடது காலை (வலது காலுக்கு கீழ்) வெளிப்படுத்தி தங்களது அமரும் இடத்தை தரையில் வைத்தும் அமர்ந்தனர்" அறிவிப்பவர்: அபூஹுமைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி



கடைசி இருப்பில் அத்தஹியாத்தை ஓதியவுடன் கீழ்காணும் ஸலவாத்தை ஓதவேண்டும்.

ஸலவாத் ஓதுதல்

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

பொருள்: இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல், முஹம்மது صلى الله عليه وسلم அவர்களின் மீதும், முஹம்மது صلى الله عليه وسلم வர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.

இறைவா இப்றாஹீம் (அலை) அவர்களுக்கும், இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் صلى الله عليه وسلم அவர்களுக்கும், முஹம்மத் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.

ஸலவாத்துக்குப் பிறகு ஓத வேண்டியவை



அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் அதாபில் கப்ரி, வஅவூது பிக மின் ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜால் வஅவூது பிக மின் ஃபித்னதில் மஹ்யா வல் மமாத் அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் மஃஸமி வல் மக்ரமி. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, அஹ்மத்

பொருள்: இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். தஜ்ஜால் என்பவனின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனைகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவங்கள் புரிவதை விட்டும், கடன் தொல்லையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.



"அல்லாஹும்ம இன்னீ ளலம்து நஃப்ஸீ ளுல்மன் கஸீரன் வலா யக்ஃபிருத் துனூப இல்லா அந்த ஃபக்ஃபிர்லீ மக்ஃபிர(த்)தன் மின் இந்திக வர்ஹம்னீ இன்னக அந்தல் கஃபூருர் ரஹீம்" என்ற துஆவை நான் தொழுகையில் ஓதுவதற்காக நபி صلى الله عليه وسلم அவர்கள் கற்றுத் தந்தார்கள். அறிவிப்பவர்: அபூபக்கர் رَضِيَ اللَّهُ عَنْهُநூல்கள்: புகாரி, முஸ்லிம்

பொருள்: இறைவா! எனக்கே நான் அதிஅளவு அநீதி இழைத்துக் கொண்டேன். பாவங்களை உன்னைத்தவிர வேறு எவரும் மன்னிக்க முடியாது. எனவே, என்னை மன்னிப்பாயாக! மேலும், எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பாவங்களை மன்னிப்பவனும் நிகரில்லா அன்புடையோனுமாய் இருக்கிறாய்.

அத்தஹிய்யாத், ஸலவாத், துஆக்கள் ஓதிய பிறகு "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்" என்று கூறி தொழுகையை முழுமைப்படுத்திட வேண்டும்.

السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ

"தொழுகயின் திறவு (உளூ எனும்) தூய்மையாகும். (உலகத் தொடர்புகளை) தடை செய்வது தக்பீர் கூறுவதாகும். அதிலிருந்து விடுபடுவது தஸ்லீம் ஆகும்" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா

ஸலாமு கூறி முகத்தை வலப்புறமும், இடப்புறமும் நன்கு திருப்ப வேண்டும். தன் கன்னத்தின் பகுதியை பின்னால் உள்ளவர்கள் பார்க்குமளவுக்கு திருப்ப வேண்டும்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது வலப்பக்கம் (உள்ளவர்களால்) தம் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும் அளவுக்கு தமது இடப்பக்கம் (உள்ளவர்களால்) தம் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும் அளவுக்கு சலாம் கூறியதை நான் கண்டேன். அறிவிப்பவர்: ஸஅது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், நஸயீ

இதுதான் தொழும் முறையாகும்.
Share

2 comments:

Sakthi said...

hi asalamu alaikkum,

i have taken your source of namaz in the way of Mohamed(pbuh) for my blog. it was very informative and clear too. thank you for that. if you do not want me to put your stuff in my blog i am please to remove it. well i wold like to have another blog which should have the suras in Tamil, i mean that i would like to know how to pronounce all in namaz. thank you. peace be with you.

Aaqil Muzammil said...

no problem you can do it can u give ur blog url plz

Related Posts with Thumbnails